குடி அரசுக்கு பாணம். - ஈ.வெ.ர குடி அரசு - தலையங்கம் - 12.11.1933

Rate this item
(0 votes)

குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும். குடி அரசு பத்திரிக்கையின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது. 

இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச்செய்யாமல் விட்டுவைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும். மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம். 

முதலாளிவர்க்க ஆக்ஷியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம் விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை . ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும். 

“குடி அரசு” தோன்றி இந்த 8 1 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப் படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலை கொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனீயம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக் கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்து வந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை . 

 

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளை கண்ணாடிபோல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக் கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள் கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடி அரசு பத்திரிகை இருக்கவேண்டிய அவசியமுமில்லை. 

சிறிது காலத்துக்கு முன் நாம் தெரிவித்துக்கொண்டபடி இனிநம்மால் நமது கடமையைச் செய்யமுடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பது மேல் என்பதுபோல் குடி அரசு” தன் கடமையை ஆற்ற முடிய வில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்து போக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்குக் கவலையில்லை. 

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் "குடி அரசு” மறைவதில் அதிகக் கவலையிருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் துகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்டமுடியவில்லை . நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டுவிட்டது. மயக்கமும். மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய் கேட்ப தில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்குபாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் "குடி அரசு” நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொருவிதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டிய தாகும். ஆனால் என்ன நடக்கின்றனவோ பார்ப்போம். 

நிற்க இதன் பயனாய் “குடி அரசி”ன் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது. அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப் போகுமோ என்றாவது யாரும் பயப்படவேண்டியதில்லை. 

நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரசாரம் என்கின்ற கொடி எங்கும்பரவிவிட்டது. “குடிஅரசோ” சுயமரியாதைக்காரரோதான் இக்கொள்கைகளைப்பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனிகருதவேண்டிய தில்லை. “குடிஅரசு”ம் சு.ம. காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே. என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக் கொள்கை யைச் சொல்லவும் பிரசாரம் செய்யவும், வெகு "தொண்டர்களும்”"தலைவர் களும்” இந்தியாவெங்கும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததுபோலவும் ஆகும். 

 

மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு “குடி அரசு” அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ்செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்துகொள்ளவேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்கிறோம். 

குடி அரசு - தலையங்கம் - 12.11.1933

Read 33 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.